Friday, February 19, 2010

பழைய நினைவும்... தஞ்சாவூரும்...











ஊர் சுற்றுவது என்பது ஒரு சுகமான அனுபவம்.அதுவும் நமக்கு பிடித்த ஊரில் என்கிறபோது அதன் மகிழ்ச்சியே தனி.சமீபத்தில் சரித்திர புகழ்மிக்க இராஜராஜசோழன் ஆண்ட தஞ்சைக்கு அடியேன் சென்றேன்.

வானலாவி நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம்,சரஸ்வதி மஹால்,
கரந்தை தமிழ்ச்சங்கம்,சுற்றிலும் ஒடும் ஆறுகளையும் பார்க்க பார்க்க
நம்மை
ஆயிரம் வருடங்கள் முன்னே
பிறந்திருக்க கூடாதா?
என்று மனது ஏங்கியது.

சிவராத்திரி அன்று
காலாற கரந்தையிலிருந்து சரஸ்வதி மஹாலைநோக்கிநடந்தேன்.
இராஜராஜசோழன் இந்த வழியாக தம் படைபரிவாரங்களுடன்வந்திருப்பாரோ?
அந்த காலம் இந்த வீதி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

ஹலோ பாத்துபோங்க சார் என்றபடி ஒரு ஹீரோஹோண்டா பைக்காரர்
அன்பாக ரோட்டைப்பார்த்து போகச்சொல்லி அறிவுருத்த இராஜராஜசோழன் கனவு கலைந்தது.

நினைவில் நான் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் சிவன் எம் சிந்தையை ஆக்கிரமிக்கும் வண்ணம் ருத்ர தாண்டவத்துடன் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளி என்ற விளம்பரபலகையில் அழகே உருவாக காட்சி அளித்தார்.

மேலும் அந்த இசைப்பள்ளியிலிருந்து தமிழ் வேதங்கள் என் செவியில் இன்ப வெள்ளமாய் பாய்ந்தது.




ஆர்வம் கட்டுக்கடங்காமல் போக
ருத்ரன் இசைப்பள்ளிக்குள் நுழைந்தேன். இராஜராஜசோழனின் திருவுருவப்படம் என்னை வரவேற்றது.


சுற்றிலும் சிவபெருமானின்
ஆனந்த திருவுருவப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.


அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகரின்வாசகங்கள் மனதில் பதியும் வண்ணம் எழுதப்பட்டிருந்தன.


அன்றுதான் ருத்ரன் இசைப்பள்ளியின் தொடக்கநாளாம். தமிழ் வேதங்களைப்பாடி யாகம்வளர்த்துக்கொண்டிருந்தனர்.
மனதை மிகவும் கொள்ளைகொண்டன தமிழ் வேதபாடல்கள்.சுற்றிலும் இளம் சிவனடியார்கள் கூட்டம்.

நிர்வாகி திரு இராஜராஜனிடமும் அவரின் இளைய சகோதரர் திரு அருண்குமாரிடமும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
அவ்வளவு விசய ஞானங்களை எளிமையாய் பகிர்ந்துகொள்கிறார்கள்.


இசையின் மேல் உள்ள ஆர்வத்தையும் சிவத்தொண்டில் கொள்ளும் நிறைவையும் அவர்கள் பேச்சில் அறிய முடிந்தது.



நிர்வாகவியலில் முதுநிலைப்பட்டம் பெற்ற இவர்கள் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியைமிகச்சிறந்த இசைப்பள்ளியாக உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



இப்பள்ளி தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை தமிழ்ச்சங்கம் அருகில்அமைந்துள்ளது.






பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறுநூறாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்கள் ஆவரே
-திருநாவுக்கரசர்

பூவனூர்ப் புனிதரின் (சிவபெருமானாரின்)திருநாமமாகிய திருஐந்தெழுத்தினை (சிவாயநம) ஒரு கோடி வரைச்சொல்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்,

தேவர்களின் தலைவனாகிய இந்திரனைவிடப் பெருஞ் செல்வம் உடையவர்கள் ஆவார்கள்.

என்ற திருநாவுக்கரசர் பாடலுகேற்ப சிவநாமம் ஒலிக்கும் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியும் பெரும் செல்வம் அடையும்என்பது திண்ணம்.


1 comments:

Anonymous said...

Nanum Rajarajacholan pola aganumu

Aaasaiyai irruku............