Monday, July 7, 2008

சின்ன சின்ன சந்தோஷங்கள்


கூகுல் சர்ச்சில் ராஜா சொக்கலிங்கம் பிளாக்கர்ஸ் என்று போட்டதில் 'ஹலோ சவுக்கியமா' என்று ஒரு டைட்டில் கிடைத்தது. ஆர்வமுடன் அதை சொடுக்கியதில் கெளரி சங்கர் என்ற எதார்த்த இளஞனின் வலைப்பதிவு படிக்க நேர்ந்தது. மிகச் சிறப்பாக எண்ணங்களை வெகு அழகாக எளிய நடையில் பதித்திருந்தார் அந்த இளஞர்.அலட்டல் இல்லாமல் அட்டகாசமாய் எழுதும் கெளரி சங்கரின் கலைத்திறமை வளர வாழ்த்துகிறேன்.

சும்மா இருக்க முடியாமல் என் பாட்டியின் பேச்சை எப்பொழுதோ செல்லில் பதிவு செய்து வைத்திருந்ததை என் பாட்டியின் மறைவுக்குப்பின் கேட்டபொழுது அவர்களின் குரல் என்னை என்னவோ செய்தது.என் பாட்டியின் பேச்சை என் சித்திபையன் சக்திக்கும், மாமாபையன் வள்ளியப்பனுக்கும் மெயிலில் அனுப்பிவைத்தேன். திடீரென்று ஒரு நாள் ஆர்குட்டில் அழைத்த போது ஸ்கிராப் ப்றம் சக்தி என்று வந்ததை கிளிக் செய்தேன். என் தம்பி சக்தியின் குறுஞ்செய்தி என் மனதெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தைப் பரப்பியது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில்தான் எவ்வளவு சந்தோசம்.19:03:08 புதன்கிழமை அன்று ஒரு கேஸ் விசயமாக நீதிமன்றத்தில் நின்றிருந்தேன். தொடர்ந்து என் அழைப்பேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. காரணம் அன்று ஜனசக்தி தினசரிப்பேப்பரில் நாங்கள் தயாரித்த "தி வேரியபிள்ஸ்" என்ற குறும்படத்தின் விமர்சனம் வந்திருந்ததுதான்.குறிப்பாக என்னுடைய மகிழ்ச்சிக்குகாரணம் அந்தப் படத்தை இயக்கிய கார்த்திகேய மணிகண்டனைப் பராட்டி எழுதியதுதான். மிகச்சைறப்பான இளஞர். உலகத் திரைப்படங்களை அவர் அலசும் விதமும்,ஸ்கிரிப்ட் எழுதும் நேர்த்தியும் வியக்கத்தக்கன. கண்டிப்பாய்த் திரையுலகில் நல்ல இயக்குனராய் முத்திரைப்பதிப்பார்.

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை எத்தனை இளஞர்கள் இந்த உலகத்தில் சாதிக்க காத்திருக்கிறார்களோ?

Monday, January 14, 2008

நாகரிகத்தின் பிடியில் நாணயத்தை இழக்கலாமா?


பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, படித்து பட்டதாரியாவது, ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்து கொண்டும், குழந்தைகளைப் பார்த்துக் கொண்டும் தன் தாய் தந்தையரை கவனித்துக்கொண்டும் வீட்டோடு இருக்கக்கூடிய ஒரு பெண்ணை மணந்து கொள்வது, அதிகபட்சம் சொந்தமாக ஒருவீடு வாங்குவது, வாழ்க்கையை இந்த அளவில் சந்தோசமாக வாழ்வது...இதுவே படித்தஇளைஞர்களின் கனவாகவே இருந்து வந்தது.

அந்நிய முதலீடுகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் படையெடுக்கத் தொடங்கியவுடன் மேற்கூறிய இளைஞனின்
கனவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டிகிரி முடிக்கிறோமோ இல்லையோ, ஆங்கிலப்புலமையிருந்தால் போதும், இருகை நீட்டி வரவேற்க நகரின் பிபிஓக்களும் தயாராகஉள்ளன.

ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு தேர்ந்தெடுக்கும் இந்த வேலைகளில் கைநிறைய சம்பளம் கிடைத்துவிடுகிறது. அவர்களின் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இந்நிறுவனங்கள் இவர்களை நிறுத்தி வைத்து வேடிக்கைப் பார்க்கின்றன. இதற்குகாரணம், வெளிநாடுகளில் இந்த வேலைகளுக்கு அளவுக்கதிகமான முதலீடு செய்ய
வேண்டும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இந்த வேலைக்கான முதலீடு குறைவே.

கல்லூரி, பள்ளிநாட்களில் ஐந்திற்கும் பத்திற்கும் பெற்றோரின் கையை எதிர்பார்த்துவாழும் இளைஞர்களின் கைகளில் அளவுக்கதிகமான பணம் கிடைக்கும்போது, அது அவர்களின் வாழ்கைப் பாதையை மாற்றி அமைக்கிறது. கூடவே ஆங்கில மோகமும் இணைந்து கொள்ள இரண்டும் சேர்ந்து அமைதியான சந்தோசமான வாழ்க்கை என்றகொள்கை மாறி, எங்கேயும் எப்போதும் சந்தோஷம் என்ற நிலைக்கு இளைஞர்கள்
செல்ல ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

தலைமுறை இடைவெளிகளும் போட்டிபோட்டுக்கொண்டு, அனுபவங்களுக்கு முக்கியத்துவம் தராத மனநிலைக்கு அவர்களைத்தள்ளுகிறது. இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்க்கைக்காக கூறும் எந்த ஆலோசனைகளையும் காதில், போட்டுக்கொள்ளாத நிலையும் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிகமாக செயல்படும் இந்த நிறுவனங்கள், வார இறுதியில் அநேகமாக விடுமுறை அளித்துவிடுகிறது. இதனால் நகரங்களில் 'வீக்எண்ட்பார்ட்டிகளும்' அதிகரித்து வருகின்றன.

சமூகக் கட்டுப்பாடுகளை வெட்டியெறிந்துவிட்டு, வெளிநாட்டு மோகத்தில் ஆண் பெண்வித்தியாசமின்றி பழகும் அவர்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதாகவும் அதன் காரணமாக கருக்கலைப்புகள் அதிகருத்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்குஇணையாக வளர்ந்து வருகிறோமோ அந்த அளவிற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும் உயர்ந்துகொண்டே செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய கலாச்சார மாற்றங்களினால், இளையதலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சமீபகால சம்பவங்கள் உதாரணமாக உள்ளது. பெண்களும் ஆண்களும் இரவுபகல் பாராமல் தங்கள் வேலை நேரங்களை அமைத்துக் கொள்வதன் மூலம் பல பாலியல் வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களும் நடந்தவண்ணம் உள்ளன. இரவில்தன்னந்தனியாக வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெண்கள்பற்றிய செய்திகள் நம்மை கலக்கமுறச்செய்கின்றன.

மேலும் இத்தகைய பணிகளில் உள்ளவர்கள் மனரீதியான மற்றும் உடல்ரீதியான நோய்களுக்கு உள்ளாவதும் சமூக அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.

கணினி தொடர்பான இத்தகைய வேலை வாய்ப்புகளால், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைளில் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ளும் விருப்பம்இளையதலைமுறையினருக்கு இல்லாமல் போய்விட்டது. பெருகிவரும் வேலைவாய்ப்புகளால் வளரும் குழந்தைகளும் சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவே பெற்றோர்களால் வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் கலைசார்ந்த அறிவினையும், அழகியல்களையும், பண்டைய மக்கள் நமக்காக தேடித்தந்த ஆனந்தங்களையும் இழந்து, உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுகளையும், தங்கள் குழந்தமையையும் தொலைக்கும்நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர்

இந்த விதமான தாக்கத்தை சமீபத்தில் தமிழில் வெளியான 'கற்றது தமிழ்' என்ற திரைப்படமும் வலியுறுத்தியது. பன்னெடுங்காலமாக இந்த மண்ணில் வேறூன்றிய தமிழால்எளிதாக பெறமுடியாத செல்வத்தையும், பதவி மற்றும் சொகுசான வாழ்க்கையையும்இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கம்ப்யூட்டர் கொடுப்பதைப் பற்றிய ஏராளமான
தமிழிலக்கிய மாணவர்களின் குமுறல் அந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலைகளினால் வாழ்க்கைச் சூழல்களில் மாற்
றத்திற்கு உட்படுபவர்களால் பாதிக்கப்படுவது, இதில் சிறிதும் சம்பந்தப்படாதவேறொரு வாழ்க்கைச் சூழலில் வாழ நேரும் நடுத்தர வர்க்கத்தினரே, இத்தகைய்யோரது செல்வக் குவிப்பினால் ஏறும் பொருட்களின் விலைவாசி, வீட்டுவடகைகள் மற்றும் மனைகள்-கட்டடங்களின் விலைஉயர்வு போன்றவை இவர்களை நிலைகுலைய வைத்து வாழ்கையின் விளிம்பில் நிற்க வைத்துவிடுகிறது.

எதிலும் மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் தங்களுடைய விருப்பங்களைமாற்றிக் கொள்வதன் மூலமே இத்தகைய வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்படும். சமூக அநீதிக்கு எதிராக ரெளத்திரம் பழகவேண்டிய வயதில் தீய பழக்கவழக்கங்க
ளைப்பழகுவதை விடுத்து தங்கள் நாட்டங்களை வாழ்வின் உண்மையான சந்தோஷங்களின்பால் மேம்படுத்தவும், இலக்கிய சிந்தனைகளை வளப்படுத்திக்கொள்ளவும் தலைப்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான கலாச்சாரபண்பாட்டு வாழ்வியல்களை உருவாக்கிகொள்ள முடியும்.


தீபா ஸ்ரீராம்

Wednesday, January 9, 2008

நேர்பார்வை


நீ மற்றவர்களிடம் காட்டும் அன்பு, உன்னுடைய பலவீனமாகக் கருதப்படலாம்.
ஆனாலும் அன்பாக இரு.
நீ மற்றவர்களுக்கு செய்யும் உதவி கவனிக்கப்படாமல் போய்விடலாம்.
ஆனாலும் உதவி செய்.
நீ வெற்றி பெற்றால் பொய்யான நண்பர்களையும், உண்மையான எதிரிகளையும் பெற நேரிடலாம்.
ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாய் இரு.
நாணயமும், யதார்த்தமும் உன்னை மிருதுவாக ஆக்கிவிடலாம்.
ஆனாலும் யதார்த்தமாகவும், நாணயமாகவும் இரு.
நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம்.
ஆனாலும் நன்மையே செய்.
வலைப்பதிவர்கள் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 28, 2007

முரளியின் காதல்

கல்யாணத்திற்கு முன் காதலியிடம்

* உன் சிரிப்பை இன்னிக்கு பூராம் பார்த்துக்கிட்டேயிருக்கலாம்...
* நீ சொன்னா கரக்டாதான் இருக்கும்...
* ஏய், இந்த முட்டைகோஸ் பொரியல் நீயா செஞ்ச நம்பவேமுடியல...
* இந்த டிரஸ்ல தேவதை மாதிரி இருக்க...
* உனக்காக 2 மணிநேரமா இந்த தியேட்டர் வாசலில் காத்திருந்தது
உன் நினைப்பால 2 நிமிசமா போயிருச்சு...
* அவசரமில்லாம பையவே வா, எனக்கு ஒரு வேலையுமில்ல...


கல்யாணத்திற்கு பின் மனைவியிடம்

* சொன்னது வாஸ்தவம்தான் அதுக்காக காலையில பல்லுகூட விலக்காம பக்கத்துலவந்து சிரிச்சா...

* என்னிக்குதான் கரெக்ட்டா சொல்லியிருக்க இப்ப சொல்றதுக்கு...

* ஏங்க உங்களுக்குபுடிச்ச முட்டைகோஸ் பொரியல் ... என்ன முட்டைகோஸ் பொரியலா கூட்டுன்னுல நெனச்சேன்...

* ஏங்க இந்த டிரஸ் நல்லாயிருக்கா...(முரளி மனதுக்குள் இந்த டிரஸோட அழகே போச்சு வெளியே) ஹா இந்த டிரஸ்கே இப்பதான் அழகு வந்திருக்கு...

* சனியனே எவ்வளவு நேரமா இந்தக்கடையில தேவுடூ காக்கறது மனுசன்னு நினச்சியா மாடுன்னு நினச்சியா...

* பராக்கு பார்த்துட்டே வர்றதப்பாரு வெட்டி ஆபீசர்ன்னா நினச்ச...

* முரளியின் காதல் நல்லபடியாகத்தான் சென்றது கல்யாணம் ஆகும்வரை,

இப்பொழுது ஆபீசை விட்டு வீட்டுக்கு போவதேயில்லை. முரளியின் கவலையெல்லாம் ஏன் இந்த ஆபீசரும் வீட்டுக்குப்போக மாட்டேங்கறார்? என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே மேனேஜரின் டேபில் மீது இருந்த போன் அலறியது, அதுவரை கடுமையாக இருந்த மேனேஜர், போனை எடுத்தார் கனிவான குரலில் கம்பெனியில ஒரு முக்கியமான மீட்டிங்,இல்லேன்னா வந்திருக்கமாட்டேனா? எப்படா மீட்டிங் முடிச்சு வீட்டுக்கு வருவேன்னு இருக்கேன், தூங்கிறாத பை டார்லிங், என்றபடி போனை டக்கென்று வைத்துவிட்டு முரளியை தேமே என்று பார்த்தார், முரளியின் மனதுக்குள் ஒராயிறம் மத்தளங்கள் ஒன்று கூடி எழுந்தது, நம்ப கேஸ்தான் இவரும் என்று நிம்மதியாய் மனதிற்குள் மகிழ்ச்சியைப் பரப்பினான்.